சமீபத்தில் எனது சொந்த ஊரான நெல்லைக்குச் சென்றிருந்தேன். சென்னையில் குடியேறி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் அடிக்கடி சொந்த மண்ணுக்கு செல்பவன். ஆனால் இந்த முறைதான், பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ஊருக்குச் சென்றேன்.
   மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல மாற்றத்தை அடிக்கடி கண்டு வரும் தமிழகத்தின் நகரங்களை போலவே திருநெல்வேலியிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் சமீபத்தில் நான் கண்ட மாற்றங்கள் என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கின.
   கேன்களில் விற்கப்படும் தண்ணீர் என்பது சென்னைக்கு தலைவிதி. ஆனால் தாமிரபரணி கரையில் பிறந்தவர்களுக்கும் இதுதான் விதி என்றால் எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது.
ஆம்....! நெல்லையிலும் ‘கேன் வாட்டர்' தவிர்க்க முடியாததாகி விட்டது.
   நெல்லை பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசு கலந்து வருவதுடன், குடிநீராக பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதால் ‘கேன் வாட்டர்' கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
   சரி , காரணம் என்னவென்று பார்க்க நான் குளித்து மகிழ்ந்த தாமிரபரணி நதியை பார்க்கச் சென்றேன்.
என்னவென்று சொல்வது....
   நெல்லையின் தாமிரபரணி கரை பகுதிகளான குறுக்குத்துறையும், சிந்துபூந்துறையும் முழுக்க முழுக்க மாறிப்போய்த்தான் இருக்கின்றன. இருபகுதிகளிலும் வீடுகள் அதிகரித்து விட்டன.
புரிந்து கொள்ள முடிந்தது.
   ஆனால் 10 அடி.... 15 அடி.... ஆழத்திற்கு கூட தண்ணீர் கட்டி நிற்கிறது. மணல் உரியப்பட்டு விட்டதால் ஆடையின்றி தவிக்கிறது தாமிரபரணி. ஆடை உரியப்பட்டால் தண்ணீரில் மாசு கலக்காமல் எப்படி பாதுகாக்க முடியும் ?ஆற்று நீரில் கலக்கும் கழிவுகளை படியச்செய்து தண்ணீரை சுத்தம் செய்யும் இயற்கை வடிகட்டியான மணல் கொள்ளை அடிக்கப்பட்டதால் தாமிரபரணி கந்தலாடை கூட இல்லாமல் நிர்வாணப்பட்டு கிடக்கிறாள்.
பிறகு வீட்டிற்கு வரும் தண்ணீர் எப்படி இருக்கும்?
   பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை வளைந்து நெளிந்து செல்லும் தாமிரபரணியின் மணல் கொள்ளை போய் விட்டதால் கழிவு நீராக தான் காட்சியளிக்கிறது தாமிரபரணி.
   நகரமயமாதல், வீடுகள் பெருக்கத்தால் வீடுகளில் சேகரிக்கப்படும் சாக்கடைகளும் தாமிரபரணியில் சேர்க்கப்பட்டு விட்டதாலும், கழிவுரை சுத்தப்படுத்தும் ஆற்று மணலும் கொள்ளை போய் விட்டதாலும்

மனிதன் திறந்து விட்ட சாக்கடை இப்போது குடிநீர் என்ற பெயரில் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வருகிறது.
வழக்கம் போலவே மாநகராட்சி நிர்வாகம் சரியில்லை.... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற முனுமுனுப்பை கேட்க முடிந்தது. ஆனால் நெல்லையில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தாமிரபரணி சுரண்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.ஆற்று மணல் கொள்ளைக்கு அரசியல் பின்புலம் என்ற சமாதானம் சொல்லும் சாமானியர்கள் உண்டு. 
ஆனால் தாமிரபரணியில் சாக்கடையை கலக்கச் செய்வது யார்? அரசியல்வாதிகளா? சுயநலம் கொண்ட பொதுமக்களா? தாமிரபரணியை காக்கும் பொறுப்பு நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் மட்டுமல்ல. தாமிரபரணியில் இருந்து தண்ணீரை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சாமானியனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
-ஜெனார்த்தனப்பெருமாள்