மனித உரிமைகளை நிலைநாட்ட உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்தது இலங்கை

    ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் உலக நாடுகள் அளித்த 210 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
    டந்த மாதம் 22 ம் தேதி சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் 14 வது மீளாய்வு கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
ஆண்டுக்கு மூன்று கூட்டங்கள் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு கூட்டத்திலும்  14 நாடுகளில் மனித உரிமைகள் நிலை பற்றி அந்தந்த நாடுகள் அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கை தொடர்பாக பிற உறுப்பு நாடுகள் கேள்விகள் கேட்கும். அந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நாடு பதில் அளிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு இலங்கை அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  அதன் மீது முன்கூட்டியே சில நாடுகள் கேள்விகள் எழுப்பி விட்டன. மேலும் கடந்த ஒன்றாம் தேதி மீதமுள்ள நாடுகளும் கேள்விகள் எழுப்பின. இந்நிலையில், இலங்கை சார்பில் அந்நாட்டு அமைச்சர் மகிந்த சரசிங்க விளக்கம் அளித்தார்.
இந்தியா தரப்பில் இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்ப தகுந்த விசாரணை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழர் பிரச்னைக்கு விரைவான அரசியல் தீர்வு காண்பதே நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் போரின்போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றி உரிய விசாரணை தேவை என்றும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு காலவரையறை தேவையென்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும் இந்தியா கோரிக்கை விடுத்தது.
அதே போல் ராணுவ உயர் பாதுகாப்பு வளையங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும்  இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க பிரதிநிதி, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.
அதே நேரத்தில், இலங்கை போரின் போது காணாமல் போனதாக கூறப்பட்டவர்களை கண்டுபிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது.
இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு பகுதிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கனடா கோரியது.
இதனிடையே,  விளக்கம் அளித்த இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் மகிந்த சமரசிங்கே, இலங்கைத் தமிழர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 10 மாதங்களாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மகிந்த சமரசிங்கே தெரிவித்தார். அத்துடன் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழர் பகுதிகளில் பணியாற்றும் காவல்துறைக்கு பொதுமக்களுடனான தொடர்பை எளிதாக்கும் வகையில் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்ட 99 நாடுகள் பல்வேறு பரிந்துரைகளை அளித்தன. இதுக்குறித்து நேற்று, இலங்கை அரசு பதில் அளித்தது. அதில் 100 பரிந்துரைகளை நிராகரித்த இலங்கை அரசு 110 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.