குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

     கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு, அவர்களது குடும்பத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து, அவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த செப்டம்பரில் அணுஉலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களில் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில், இடிந்தகரையைச் சேர்ந்த நஸ்ரேன், லூர்து சாமி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தற்போது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.