செயல்படாத குத்தாலம் எரிவாயு நிலையம்

    மிழகத்தில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையிலும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்குச் சொந்தமான  குத்தாலம் எரிவாயு மின் நிலையம் நீண்டகாலமாக செயல்படாமல் இருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்குச்  சொந்தமான நான்கு எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களில் வழுதூர் 1வது நிலையமும் குத்தாலம் மின் நிலையமும்  செயல்படாமல் இருந்த நிலையில், நேற்று முதல் வழுதூர் மின் நிலையம் உற்பத்தியைத் துவங்கியுள்ளது.  ஆனால், 101 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையம்  கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து செயல்படாமல் இருக்கிறது.
வேறு மின் நிலையங்கள் பழுதடையும்போது குத்தாலம் மின் நிலையத்திலிருந்து பாகங்களை எடுத்து பழுதடைந்த நிலையங்களுக்குப் பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குத்தாலம் நிலையம் தற்போது ரோட்டர், கியர் பாக்ஸ் உள்ளிட்ட பாகங்களை இழந்துள்ளது. அதேபோல 92 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள வழுதூர் 2வது மின் நிலையம் அதிக அதிர்வின் காரணமாக 68 மெகா வாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்துவருகிறது.
குத்தாலம் எரிவாயு உற்பத்தி நிலையத்தைப் பொறுத்தவரை, அதற்கான உதிரி பாகங்கள் விரைவில் பொருத்தப்பட்டு அந்த நிலையமும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையம் சரிசெய்யப்படும் நிலையில், 101 மெகா வாட் மின்சாரம் யூனிட்டிற்கு 2 ரூபாய் 86 காசு என்ற குறைந்த உற்பத்திச் செலவில் மின்வாரியத்திற்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
                                                          -இணைய செய்தியாளர் - G.S.குரு